தேர்தல் முடிந்த கையோடு உயர்த்தப்பட்ட பால் விலை, சுங்க கட்டணம்: அதிர்ச்சியில் மக்கள்!
அமுல் பால் அதன் பல்வேறு பாலின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
பல்வேறு மாநில அரசுகள் சார்ந்த கூட்டமைப்புகள் அவரவர் மாநிலங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பால் விற்பனையை மேற்கொள்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுத்துறை நிறுவனமான பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது எனலாம். தனியார் பால் நிறுவனங்களை காட்டிலும் பால் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர் என இரு தரப்பையும் சமமாக பலனளிக்கும் வகையில் இதுபோன்ற நிறுவனங்கள் செயல்படும்.
அந்த வகையில், குஜராத் பால் உற்பத்தியாளர் சங்க தயாரிப்பு நிறுவனத்தால் அமுல் பால் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. கடைசியாக 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பால் விலையை அமுல் நிறுவனம் உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் அமுல் நிறுவனம் இன்று முதல் பால் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தியுள்ளது.
அதன்படி அமுல் தாசா பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து 56 ரூபாயாகவும், அமுல் கோல்ட் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் அதிகரித்து 68 ரூபாயாகவும் விற்பனையாகிறது. தேர்தல் முடிந்த கையோடு பால் விலை உயர்த்தப்பட்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளது. தேர்தல் முடிந்ததும் சுங்க கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்று வாகன ஓட்டிகள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.