For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் பதவி வழக்கை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு!

12:36 PM Jan 09, 2025 IST | Web Editor
அதிமுக பொதுச்செயலாளர் பதவி வழக்கை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை   உயர் நீதிமன்றம் உத்தரவு
Advertisement

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அளிக்கப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்த, தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் முடிவு காணும் வரை, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என சூரியமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, மனுதாரரின் கோரிக்கை நான்கு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம் நான்கு வாரங்களில் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க கூடாது என முன்னாள் எம்பி ரவீந்திரநாத் மற்றும் கே.சி பழனிச்சாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்த மனுவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஸ்ரீ குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “கட்சியில் உறுப்பினர்களாக இல்லாத தனிப்பட்ட நபர்கள் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருக்கிறார்கள். இதை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது என கூறி தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் மனுவுக்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Tags :
Advertisement