உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி - வீடுகளை காலி செய்ய வேண்டாம் என தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிர்வாகம் அறிவிப்பு!
உயர் நீதிமன்ற நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வீடுகளை தற்போது காலி செய்ய வேண்டாம் என்று பிபிடிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வீடுகளை தற்போது காலி செய்ய தேவையில்லை என பிபிடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிபிடிசி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி, 75 சதவீத இழப்பீட்டு தொகை நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்படும். தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை சமர்பித்து அதனை பெற்றுக் கொள்ளலாம். நீதிமன்ற மறுஉத்தரவு வரும்வரை தற்போது ஒப்பந்த த்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ரோஸ்மேரி, ஜான்கென்னடி, புதியதமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அந்த பகுதியிலேயே வாழ்ந்து பழகிவிட்டனர். அவர்களுக்கு அரசின் டான்டீ நிர்வாகம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று தங்களின் பொறுப்பில் நடத்தினால் அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். குத்தகை காலம் வருகிற 2028ம் ஆண்டு முடிவடைகிற நிலையில் தற்போதே பிபிடிசி நிறுவனத்தினர், தொழிலாளர்களை வௌியேற்ற முயற்சி செய்கிறது. தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தொழிலாளர்களுக்கான 75 சதவீத இழப்பீட்டு தொகையை நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பிபிடிசி நிறுவனம் ஒப்படைக்க வேண்டும். தொழிலாளர்கள் அங்கு சென்று அதிகாரிகளிடம் கடிதம் வழங்கி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். தேயிலை தோட்ட தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற கூடாது. அவர்களின் மறுவாழ்விற்கு நிரந்தர திட்டம் குறித்து அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.