For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் - தலைவராக மோகனகிருஷ்ணன் தேர்வு!

08:23 AM Dec 16, 2023 IST | Jeni
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்   தலைவராக மோகனகிருஷ்ணன் தேர்வு
Advertisement

7 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் ஜி.மோகனகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வழக்கறிஞர்கள் சங்கம் (எம்எச்ஏஏ) இயங்கி வருகிறது. இந்த சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற நிலையில், பல்வேறு வழக்குகள் காரணமாக தேர்தல் தள்ளிப்போனது.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் இந்த தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டது. ஆனா அப்போது ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக தேர்தல் பாதியில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் நடத்தும் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்தல் நேற்று நடைபெற்றது. எம்எச்ஏஏ வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களில் வாக்களிக்க தகுதியான 4,752 வழக்கறிஞர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளநிலை செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு 9 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 8 பேரும், செயலாளர் பதவிக்கு 10 பேரும், பொருளாளர் பதவிக்கு 9 பேரும், நூலகர் பதவிக்கு 11 பேரும், மூத்த செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 42 பேரும், இளைய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 35 பேரும் போட்டியிட்டனர்.

நேற்றிரவு தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 1,301 வாக்குகள் பெற்று சங்கத்தின் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட பால் கனகராஜ் 1134 வாக்குகளும், வேல்முருகன் 734 வாக்குகளும் பெற்றனர்.

இதையும் படியுங்கள் : சென்னையில் புரோ கபடி போட்டிகள் - அமைச்சர் உதயநிதியிடம் முதல் டிக்கெட்டை வழங்கியது தமிழ் தலைவாஸ் அணி

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி.மோகனகிருஷ்ணன், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று, சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மீண்டும் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றியை அவரது ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், சங்கத்தின் முன்னாள் தலைவர் என்பதும், பாஜகவின் சட்டப்பிரிவு செயலாளராக உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement