“இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான், பாஜக களத்திலேயே இல்லை” - ஜெயக்குமார் விமர்சனம்!
இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான் என்றும், களத்தில் இல்லாத பாஜக பற்றி பேச்சே இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
“முதன்முதலில் சவுண்ட் இன்ஜினியர் போஸ்டிங் கிடைத்து இருந்தால், இப்போது ரிட்டயர்ட் ஆகி இருப்பேன். அப்படி இருந்தால் உங்களை எல்லாம் பார்த்திருக்க முடியாது. என் தந்தை அரசியல்வாதி தான். ஆனால், நாங்களாக தான் முன்னேறி வந்தோம். என் மகனும் அப்படி தான். ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்கு உதவி செய்யும் கட்சி அதிமுக தான். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் முகங்கள் அதிமுகவுக்கு தான் சொந்தம். எங்களுடைய தலைவர்களின் முகத்தை காட்டி ஓட்டு வாங்க நினைக்கும் அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது. இது கண்டனத்திற்குரிய விஷயம். அவர்களுடைய தலைவர்களின் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம் தான். மக்களின் நாடித்துடிப்பை முழுமையாக அறிந்த பெரிய இயக்கம் அதிமுக. எங்களை யாரும் உருட்டவும் முடியாது. மிரட்டவும் முடியாது. 1972-ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்த இயக்கம் இருக்கக்கூடாது என்று பல வகைகளில் தொந்தரவு கொடுத்தார். 1000 கருணாநிதி, ஸ்டாலின், மோடி வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.
யாரை நம்பியும் நாங்கள் இல்லை. எங்களுக்கென்று தனித்தன்மை உள்ளது. மற்ற கட்சிகள் கூட்டணி வைக்க வந்தால் ஏற்றுக்கொள்வோம். வரவில்லை என்றாலும் கவலை இல்லை. ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகையாளர்கள். அவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடக்கிறது. இரும்புக் கரம் கொண்டு அடக்கி, எங்களைப் பற்றி செய்தி போடக்கூடாது என்று சொல்கிறார்கள்.
இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.