நவ.28-ல் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் வரும் நவ.28ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13 ஆம் தேதியும், 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக நவம்பர் 20 ஆம் தேதியும் நடைபெற்றது.
முதல் கட்ட வாக்குப்பதிவில் 64.86 சதவீதம், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.59 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்சா (JMM) கட்சி, காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் இடம்பெற்றது.
தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக, இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வாரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார் ஹேமந்த் சோரன். இதனையடுத்து வரும் நவ.28ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.