ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரம் | நடிகர் சித்திக்கை கைது செய்ய #SupremeCourt இடைக்கால தடை!
மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வித்தது.
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனா். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதனையடுத்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்பித்தது ஹேமா கமிட்டி.
அந்த அறிக்கையில் மலையாள திரை உலகத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் பயம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எதிர்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. சூட்டிங் செல்லும் இடத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களைத் தவிர்க்கவே பலர் தங்கள் பெற்றோரை அல்லது உறவினர்களை உடன் அழைத்துச் செல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.சூட்டிங்கின் போது பெண்கள் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்து விடுகிறார்களாம் என்றெல்லாம் கமிட்டி அளித்த அறிக்கையில் கூறப்பட்டது பரபரப்பை கிளப்பியது.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து கேரள அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அதேபோல், மலையாள முன்னணி நடிகர்கள், நடிகைகள் சிலரும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, சித்திக் மீது பிரபல நடிகை அளித்த புகாரின் பேரில், சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஸ்கட் ஹோட்டலில் 2016 ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடிகை அளித்த புகாரில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மூத்த மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன் ஜாமின் பெறுவதற்காக கேரள உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் சித்திக். ஆனால் செப் 24ம் தேதி அவருக்கு முன் ஜாமின் வழங்க மறுக்கப்பட்டதால், அவர் தலைமறைவானார். இதனையடுத்து லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்குவது குறித்த வழக்கை நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இன்று விசாரித்தது. இதையடுத்து மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவித்தது. மேலும், கேரள அரசும், புகார் அளித்த நடிகையும் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.