கோடை வெயிலில் தண்ணீர் இன்றி தவிக்கும் ஆதரவற்ற நாய்கள்.. 7 ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் செய்யும் நல் உள்ளங்கள்..
சென்னை ரோட்டரி கிளப் உடன் இணைந்து நியூ கார்னர்ஸ்டோன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் கோடைகாலத்தில் நீர் இன்றி தவிக்கும் ஆதரவற்ற நாய்களுக்கு தண்ணீர் பவுல் விநியோகம் செய்து வருகின்றனர்.
இந்த தண்ணீர் பவுலை சரியாக பராமரிக்கவும், தினசரி தண்ணீர் வைத்து பராமரிக்கவும் அவர்கள் தனி குழு ஒன்றை அமைத்து சேவை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் சொக்கலிங்கம் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
"இந்த வெயில் காலத்தில் நாய்களுக்கு அதிகமாக ஹீட் ஸ்ட்ரோக் வரும் வாய்ப்புகள்
அதிகமாக இருக்கிறது. இது போன்ற ஸ்ட்ரோக் வரும்போது நாய்கள் மயக்கமடைந்துவிடும். அதிக வெப்பத்தால் நாய்களின் மூக்கு, வாய் போன்றவற்றில் இரத்தம் வரக்கூடும். பின்னர் இதனால் அவை இறக்கவும் நேரிடுகிறது.
இது போன்று நாய்கள் மயக்கம் அடைந்து விட்டால் உடனடியாக ஒரு ஈர துணி அல்லது
சாக்கை கொண்டு நாயின் உடல் முழுவதும் சுற்றி பின்னர் அருகில் இருக்கும்
கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாயின் உடலில் சூடு சற்று குறைந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும்.
மேலும், இந்த கோடை காலத்தில் நாய்கள் குறைந்தது 8 லிட்டர் அளவு தண்ணீரை
உட்கொள்வது நல்லது. தர்பூசணி போன்ற நீர்சத்து உள்ள பழங்களை கொண்டு உணவளிப்பது நல்லது. சாக்லேட், கிரேப்ஸ், நட்ஸ், ரைசின், உலர் பழங்கள் வகைகள் ஆகிவற்றை தவிர்க்க வேண்டும்.
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு நாம் இவை அனைத்தையும் செய்ய முடியும். ஆனால் தெரு நாய்களுக்கு பெரும்பாலும் யாரும் முன்வந்து தண்ணீர், உணவு வைப்பது அரிது. எனவே, நாங்கள் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளோம். இந்த வருடம் கிட்டத்தட்ட 1 லட்சம் தண்ணீர் பவுல்களை மக்களுக்கு கொடுத்து இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இதனை இந்த கோடைகாலம் முடியும் வரை தண்ணீர் ஊற்றி அதை பராமரிக்கவும் கூறியிருகிறோம்" என்றார்.
பின்னர் பேசிய ரோட்டரி கிளப் உறுப்பினர் கூறியதாவது:
"நாங்கள் இந்த சேவையை கடந்த 7 ஆண்டுகளாக செய்து வருகிறோம். இன்று சூலை, அண்ணாநகர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் உள்ள தன்னார்வலர்களுக்கு இன்று ஒரே
நாளில் கார்னர்ஸ்டோன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர்
சொக்கலிங்கத்துடன் இணைந்து 100 பவுல்கள் அளித்துள்ளோம்.
மேலும், நாங்கள் எங்கள் நண்பர்கள் அக்கம் பக்கத்தினர், சொந்த காரர்கள் என
அனைவரிடமும் இது போன்று பவுல் அல்லது ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தினமும் நீர்
ஊற்றி வைக்குமாறு கூறியிருக்கிறோம்."
இவ்வாறு அவர் கூறினார்.