#TajMahal மேற்கூரையில் திடீர் நீர் கசிவு! சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாஜ் மஹாலின் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
ஆக்ராவில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கனமழையால் தாஜ்மஹாலின் வளாகத்தில் உள்ள தோட்டம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. இதுதொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் மேற்கூரைப் பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் :“எனக்கு எதுவும் தெரியாது; ஆனால் எங்கள் நீண்டகால நிலைப்பாடுதான்” – ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என பேசும் வீடியோ குறித்து #Thirumavalavan பதில்!
தாஜ் மஹாலில் ஏற்பட்ட கசிவு குறித்து ஆக்ரா வட்டத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல் கூறுகையில் : “தாஜ் மஹாலின் பிரதான மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதை நாங்கள் கண்டோம். எனவே, டிரோன் கேமரா வைத்து மேற்கூரையை சோதனை செய்தோம். ஆனால், கசிவினால் எந்த சேதமும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாகப் பேசிய உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி மோனிகா சர்மா, “தாஜ் மஹால் இந்தியாவின் பெருமை மிகுந்த நினைவுச் சின்னம். இதனை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். மேலும், சுற்றுலாத் துறையில் பணிபுரியும் 100 - க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் தாஜ் மஹால் மூலம் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளோம். எங்களுடைய ஒரே நம்பிக்கை இதுதான்” எனத் தெரிவித்தார்.
ஆக்ராவில், மழைநீர் தேங்கியதால் தேசிய நெடுஞ்சாலை ஒன்று மூடப்பட்டு, வயல்களில் பயிர்கள் மூழ்கி பலருக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. கனமழை காரணமாக ஆக்ராவில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன.