கனமழை எதிரொலி | ஜம்மு காஷ்மீரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் ஆற்றின் அருகில் இருக்கும் தரம்குண்ட் கிராமத்தில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் புகுந்ததில் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. மேலும், 25 முதல் 30 வீடுகள் சேதமடைந்தன.
மேலும் கனமழை காரணமாக பாக்னா கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் முகமது அகிப் (14), முகமது சாகிப் (9) மற்றும் மோகன் சிங் (75) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கிய சுமார் 100 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவுகள், ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றால் ராம்பன் மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் மண்சரிவால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி காஷ்மீரின் கல்வி அமைச்சர் சகினா இதூ, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "தொடர்ந்து கடுமையான வானிலை சூழல்களால் 21-ம் தேதி (இன்று) ஒரு நாள் அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன" என பதிவிட்டுள்ளார்.