#Gujarat -ல் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய 33 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
குஜராத் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 33 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குஜராத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் வதோதரா, போர்பந்தர் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை தொடர்வதால், இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போர்பந்தர் பகுதியில் கன்டோல் என்ற இடத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் பலர் மொட்டை மாடியில் சிக்கித் தவித்தனர். அவர்களை கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரில் மீட்டு முதலுதவி அளித்து மாநில நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு சுமார் 33 பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். மிக மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல், கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டது.
இதையும் படியுங்கள் : #RainAlert – அடுத்த 3 மணிநேரத்திற்கு 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!
இதே போல் கடந்த 27ம் தேதி இரவு, படகு பழுதாகி குஜராத் கடலில் சிக்கித் தவித்த மீனவர்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து அங்கு கடலோர காவல் படையின் அப்ஹீக் என்ற கப்பல், கடல் கொந்தளிப்பாக இருந்த நேரத்தில் மீட்பு பணிக்கு சென்றது. பழுதடைந்த மீன்பிடி படகு கயிறு மூலம் கட்டி ஓக்ஹா பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. மீனவர்கள் 13 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.