சீனாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு!
வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக யூசாங், லான்சோ உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக ஜில்லாங் மலைப்பகுதியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கனமழை மற்றும் வௌ்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில் 33 பேர் மாயமாகி உள்ளனர். அதேபோல், குவாங்டாங் மாகாணத்திலும் கனமழை வெளுத்து வாங்கிய போது நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் 4000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்தார். அப்போது வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணியை தீவிரப்படுத்தவும், தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.