தொடரும் கனமழை - பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இதனிடையே, இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் இன்று கன முதல் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலரை நாளை வெளியாகிறது! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார்!!
அதேபோல் கனமழை காரணமாக மதுரையிலும், சென்னையிலும், கன்னியாகுமரியிலும், மயிலாடுதுறையிலும், சிவகங்கையிலும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இன்று கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.