டெல்லியில் தொடரும் கனமழை - தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!
டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய ஜல் விகார் பகுதியில் மழைநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லி தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வந்த நிலையில், நேற்று இரவிலிருந்து மழை பெய்து வருகிறது. இதனால் டெல்லியின் பல பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் வாட்டி வதைத்த வெயில் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவித்த நிலையில், தற்போது பெய்துள்ள மழையால் தண்ணீர் தட்டுப்பாடு தீரும் என்றபோதிலும் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டுள்ளனர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய ஜல்விகார் பகுதியில் 4000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் ஆங்காங்கு மழைநீர் தேங்கி நிற்பதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்குள் செல்ல முடியாமல் தெருவிலே காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த தொடர் கனமழையால் டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழந்தது. இந்த விபத்தில் வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.