அமெரிக்காவை புரட்டிப் போட்ட கனமழை - 9 பேர் உயிரிழப்பு!
அமெரிக்க மத்திய கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கென்டகி, வா்ஜீனியா, மேற்கு வா்ஜீனியா, டென்னசி, ஆா்கன்சாஸ் ஆகிய மாகாணங்களை வெள்ளநீர் சூழந்துள்ளது. பொதுமக்களின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததோடு வாகனங்களும் நீரில் மூழ்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது” – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மேலும் தொடர்கனமழையால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மண்சரிவுகளும் ஏற்பட்டன. இதனால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையே, கென்டகி மாகாணம் முழுவதும், மேற்கு வா்ஜீனியாவின் 10 பகுதிகளிலும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 39,000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங் கென்டகியில் மழை வெள்ளத்தில் சிக்கி குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.