கனமழை எதிரொலி | கேரளாவில் 11 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக கேரளாவில் 11 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நேற்று காலை முதலே கனமழை பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், முண்டகையில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலையில் பெரிய அளவிலான 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 125 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, கேரளா மாநிலத்தின் கடற்கரைக்கு நாளை இரவு வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது ஒரு பக்கம் இருக்க மற்றொருபுறம் கேரள முழுக்க கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழை காரணமாக கேரளாவின் பத்தனம்திட்டா, காசர்கோடு, இடுக்கி,
திருச்சூர், மலப்புரம், கண்ணூர், பாலக்காடு, கோழிக்கோடு, எர்ணாகுளம், வயநாடு
ஆலப்புழா ஆகிய 11 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவின் கோழிக்கோடு அருகில் உள்ள புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.