சென்னையை சூழ்ந்த கடும் பனிமூட்டம்... விமான சேவை பாதிப்பு!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக பெரும்பாக்கம், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, ஒட்டியம் பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சூழ்ந்த பனிமூட்டத்தினால் வாகன ஒட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பனிப் பொழிவினால் வாகன ஓட்டிகளால் எதிரில் வரக்கூடிய வாகனங்களை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
சென்னை விமான நிலையம் பகுதிகளில் கடுமையான
பனிப்பொழிவு நிலவுவதால் ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. இதன் காரணமாக விமானங்கள் தரையிரங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கோலாலம்பூர், மஸ்கட், சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தென்மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி வரும் விரைவு ரயில்களும் பனிமூட்டம் காரணமாக தாமதமாக இயக்கப்படுவதாக தெரிகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். நேற்றும் கோலாலம்பூரில் இருந்த சென்னை வர வேண்டிய விமானமும் தாமதமாக இயக்கப்பட்டது. மும்பையில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் கொழும்பு, டெல்லி, துபாய் செல்லும் விமானங்களும் 20 நிமிடங்கள் தாமதமாகவே புறப்பட்டன.