தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்...சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்...
தமிழ்நாட்டில் நேற்று 12 இடங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 104 டிகிரி வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். மேலும், உள் மாவட்டங்களில் நேற்று (ஏப். 30) ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலையானது கரூர் பரமத்தியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருச்சி, சேலம், மதுரை, தர்மபுரி, மதுரை, திருத்தணி, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் 107 முதல் 104 ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 நாள்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். சென்னையில் 48 மணி நேரத்தில் வெப்பநிலை 104 டிகிரி வரை நிலவும்”
என தெரிவிக்கப்பட்டுள்ளது.