சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலை! உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 1,301 ஆக உயர்வு!
கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களின் ஒன்றான ஹஜ், இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மெக்காவில் உள்ள ஹஜ்ஜிற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதற்காக சுமார் 15 லட்சம் பக்தர்கள் சவுதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் திரண்டுள்ளனர். இந்த நிலையில் சவுதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலையால், இந்தியர்கள் 98 பேர் உட்பட ஹஜ் புனிதப் பயணிகள் 1,301 ஆக உயர்ந்துள்ளனர்.
இது குறித்து சவுதி சுகாதார அமைச்சர் ஃபஹ்த் பின் அப்துர்ரஹ்மான் அல்-ஜலாஜெல் கூறுகையில், "1,301 இறப்புகளில் 83 சதவீதம் பேர் முறையாகப் பதிவு செய்யாத யாத்ரீகர்கள், அவர்கள் ஹஜ் சடங்குகளைச் செய்ய அதிக வெப்பநிலையில் நீண்ட தூரம் நடந்து சென்றனர். 95 யாத்ரீகர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த யாத்ரீகர்கள் பலரிடம் அடையாள ஆவணங்கள் இல்லாததால், அவர்களை அடையாளம் காணும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்கள் மெக்காவில் புதைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 660க்கும் மேற்பட்ட எகிப்தியர்கள்" என்றார். மேலும், அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவுக்குச் செல்ல உதவிய 16 நிறுவனங்களின் உரிமங்களை எகிப்து அரசு ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.