வடதமிழகத்தில் வெப்ப அலை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வட தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுவதால், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதர பகுதிகளில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.