இந்தியாவில் முதல் முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை - டெல்லி மருத்துவர்கள் அசத்தல்!
டெல்லியில் இதய பிரச்னையால் பாதிக்கப்பட்ட நாய்க்கு, கால்நடை மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
டெல்லியில் பீகிள் இனத்தைச் சேர்ந்த 7 வயதான ஜூலியட் என்ற நாய் 2 ஆண்டுகளாக மித்ரல் வால்வு நோயால் (இதயக் குழாய் பாதிப்பு) பாதிக்கப்பட்டிருந்தது. மித்ரல் வால்வில் ஏற்படும் பாதிப்பினால், இதயத்தின் இடதுபுறத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இந்த நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜூலியட்டின் உரிமையாளர்கள் கடந்த ஒரு ஆண்டாக, அதற்கு இதய நோய்க்கான மருந்துகளை வழங்கி வந்துள்ளனர்.
தொடர்ந்து, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ட்ரான்ஸ்கதேட்டர் எட்ஜ்-டூ-எட்ஜ் எனப்படும் விலங்குகளுக்கான அறுவை சிகிச்சை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டதை ஜூலியட்டின் உரிமையாளர்கள் அறிந்தனர். இதனையடுத்து, இந்த சிகிச்சை மேற்கொள்வதற்காக தனியார் கால்நடை மருத்துவமனைக்கு ஜூலியட்டை அவர்கள் அழைத்துச் சென்றனர்.
பின்னர் மே 30 அன்று ஜூலியட்டுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, நல்ல உடல்நலத்துடன் இன்று ஜூலியட் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர் ஷர்மா பேசும்போது, "மித்ரல் வால்வு நோய் இந்தியாவில் உள்ள நாய்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்றாகும். உலகிலுள்ள நாய்களில் 80 சதவீத இதய பிரச்னை இந்த நோயால் வருகிறது.
நாய்கள் இறப்பிற்கு இது முக்கியக் காரணமாக இருக்கிறது. இதுவரை முழுமையாக இதனைக் குணமாக்க முடியாமல் இருந்தது. தற்போது இந்த சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தியுள்ளோம். உலகில் மிகச்சில மையங்களிலேயே இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த வகை இதயப் பிரச்னையை சரி செய்வது மனிதர்களுக்கு வரும் இதயக் குழாய் நோய் சிகிச்சை செயல்முறையைப் போன்றதே. இந்த சிகிச்சையின் மூலம் இதய நோயால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற நாய்களைக் குணப்படுத்தலாம்” என்று கூறினார்.
கால்நடை மருத்துவத்துறையில் ஆசியாவில் முதல்முறையாகவும், உலகிலேயே 2வது முறையாகவும் மருத்துவர் ஷர்மா குழுவினரால் இந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.