இதயத்தில் ரத்தக்கசிவு - அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திர காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் எனும் இளைஞர் நகை திருட்டு தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். இதனையடுத்து மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில், அஜித்குமார் தலையின் நடுப்பகுதி, இரு பக்கவாட்டு பகுதிகளிலும் கட்டையால் அடித்தது போன்ற பெரிய காயங்கள் இருந்துள்ளன. அதனால் மூளையின் வலது, இடது பகுதிகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளை செயலிழந்துள்ளது. தலையில் ஏற்பட்ட காயத்தால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு நாக்கை கடித்த நிலையில் இறந்துள்ளார். இரு காது, மற்றும் மூக்கிலும் ரத்தம் கசிந்த கறை, இரு கண்களிலும் வீக்கம், இரத்தக்காயம் இருந்துள்ளன.
இதயத்தின் பிரதான ரத்தக்குழாயில் இரு இடங்களில் ரத்தம் கசிந்திருக்கிறது. நுரையீரல், கல்லீரலிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு கால் மூட்டு பகுதிகள், கைகளிலும் 6 பெரிய காயங்கள் என உடல் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்துள்ளன. இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூட்டினால் ஏற்பட்ட காயம் உள்ளது. பழுப்பு நிறத்தில் ஒரு திரவம் வயிற்றில், உணவுடன் சேர்ந்து சரியாக செரிமானம் ஆகாமல் இருந்துள்ளதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.