பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம்!
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டபேரவைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு பீகாரில் தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வருகிறது. மேலும் நாடு முழுவதும் இந்த பணிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் தொடங்கியது.
எதிர்கட்சிகள் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆகிய விவகாரங்களை முன்வைத்து, தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால், முதல் வாரம் முழுவதும் நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கு இன்று நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
அதேவேளையில், இந்த மனுக்கள் மீதான வாதங்களை முன் வைக்கும் வகையில் வழக்கு விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் விசாரணையின் போது, ஆதார் அட்டையை ஆவணமாக பெற முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தபோது, ”ஆதார் மற்றும் ரேஷன் அட்டைகளை பெறுவதில் என்ன பிரச்சனை ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் அவர்கள், ஆவணங்களில் பிரச்சனை இருந்தால் தனிப்பட்ட நபர்கள் மீது நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கலாமே தவிர, ஒட்டு மொத்தமாக ஆதார் அட்டையை நிராகரிக்க கூடாது” என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர்.