#Doctors தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் வழக்குப்பதிவு!
மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நாளை 24 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : #NationalFilmAwards | சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி, சிறந்த நடிகை – நித்யா மேனன், மானசி பரேக்!
பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து ஆகஸ்ட் 14ம் தேதி இரவு கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் போல மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் மருத்துவர்கள் தாக்கியது. மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்திய அந்த கும்பல், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மீதும், காவல் வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதற்கிடையே, பணியில் இருக்கும்போது மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
"அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. பணியின்போது அவர்கள் மீது உடல் ரீதியான வன்முறை தாக்குதல் நடைபெறுகிறது. அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். பெரும்பாலும் நோயாளிகள் அல்லது நோயாளிகளுடன் வருபவர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். எனவே, பணியின் போது சுகாதாரப் பணியாளர் மீது ஏதேனும் வன்முறை ஏற்பட்டால், சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை (எஃப் ஐ ஆர் ) பதிவு செய்ய வேண்டும். இதற்கு அந்த மருத்துவனை நிர்வாகமே பொறுப்பு"
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.