அவரே திருடுவாராம்... அவரே கேஸும் கொடுப்பாராம்... ரூ.6 லட்சம் திருடுபோனதாக நாடகம் - புகார் அளித்தவரே சிக்கியது எப்படி?
ரூ. 6 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்த நபரே அவ்வழக்கின் குற்றவாளி என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட 5 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
6,10,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக காவல்துறையில்
புகார் அளித்த நபரே அவ்வழக்கின் குற்றவாளி என காவல்துறை விசாரணயில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட 5 நபர்களை கைது செய்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
சுரேஷ் (39) த/பெ கருணாநிதி என்பவர் பெரம்பலூர் மாவட்டம் கிழக்குத் தெரு, மேட்டுப்பாளையம், வேப்பந்தட்டை வட்டத்தில் வசித்து வருகிறார். இவர் வங்கியில் வைத்திருக்கும் நகையை மீட்டு தனியார் நகைக்கடை உரிமையாளரான சக்திவேல் என்பவரிடம் அடகு வைப்பதாக கூறியுள்ளார். இதற்காக அந்த தனியார் நகைக்கடை உரிமையாளரிடமே ரூபாய் 6,10,000 /- பணத்தை கடனாக பெற்றுக்கொண்டு நகையை மீட்க CSB வங்கிக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது வங்கி அலுவல் நேரம் முடிவடைந்து விட்டதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்ததன்பேரில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்த பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தன்னிடம் இருந்த ரூபாய் 6,10,000 பணத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டதாகவும் பணத்தை கண்டுபிடித்து தருமாறும் பெரம்பலூர் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த புகார் வழக்காக பதிவு செய்யப்பட்டு பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வளவன் வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்தனர்.
விசாரணையில் தனிப்படையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும், பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததிலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் கிராமம் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த 1.சுகன்ராஜ் (27) த/பெ சுப்பிரமணியன் , 2.சூர்யா (23) த/பெ செல்ல பிள்ளை , 3.சூர்யா (24) த/பெ ரங்கராஜ் , 4.சுதாகர் (25) த/பெ கிருஷ்ணன் மற்றும் 5.முகமது இம்தியாஸ் த/பெ காதர் உசேன் வடக்குத்தெரு தேவையூர் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் ரூபாய் 6,10,000 /- பணத்தை திருட திட்டம் தீட்டி, அரங்கேற்றியது புகார் அளித்த சுரேஷ் தான் என்பது தெரியவந்தது. இதன் பின்னர் பெரம்பலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் கருணாகரன் கைது செய்யப்பட்ட நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து சுமார் 3,00,000 லட்ச ரூபாய் பணம், 3 டாடா ஏஸ் வாகனம் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை
பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சுரேஷ் மற்றும் 2 நபர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.