ஹத்ராஸ் நெரிசல் சம்பவம்: "நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம்" - சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை!
ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு சாமியார் போலே பாபாவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம் என்று சிறப்பு விசாரணைக் குழு உத்தரப்பிரதேச அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக இரண்டு நபர்கள் கொண்ட சிறப்பு விசாரணை குழு உத்திரப்பிரதேச அரசு சார்பில் அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு யார் காரணம்? என்பது குறித்தும், இது திட்டமிட்ட சதியா என்பது குறித்தும் இந்தக் குழு விசாரணை மேற்கொண்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வுகள் எதையும் நடத்தாமல் அனுமதி வழங்கி இருக்கிறார்கள் எனவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய தரவுகளை வழங்காமல் அனுமதி பெற்றதோடு, விதிமுறைகளையும் மீறி செயல்பட்டு இருக்கிறார்கள் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், விசாரணை அறிக்கையில் சாமியார் போலே பாபாவின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.