"விஜய் சம்பாதித்த பணத்தில் மக்கள் நலன் என ஏதாவது செய்திருக்கிறாரா" - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி?
தூத்துக்குடியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள். அது மட்டுமல்லாமல் நாளை அண்ணா பிறந்த நாளை ஒட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் உறுதிமொழி ஏற்கக்கூடிய நிகழ்வு நடைபெற உள்ளதாக கூறினார்.
தவெக தலைவர் விஜய் திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு, "தேர்தல் வாக்குறுதி என்பது மக்களுக்கு பல்வேறு வகையில் நன்மை செய்ய வேண்டும். எதையெல்லாம் செய்ய வேண்டும், செய்யலாமென வாக்குறுதி கொடுக்கப்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக இந்த நிதியை கொடுத்தால் வாக்குறுதி நிறைவேற்றி விடுவார்கள் என ஒன்றிய அரசாங்கம் நிதி ஆதாரங்களை கொடுக்க முடியாமல் தடை செய்கின்றது.
விஜய் நடிகராக இருக்கும் போது 200 முதல் 300 கோடி ரூபாய் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகின்ற நடிகர். எந்த செயலாவது மக்களுக்காக செய்திருக்கிறாரா இல்லை. எதுவும் செய்யாமல் கேள்வி கேட்பது எளிது எனக் கூறிய அவர் முதலமைச்சர் மக்களுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பாஜக அரசு எத்தனை இடைஞ்சல்கள் செய்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்போடு முதலமைச்சர் செயல் பட்டு வருகிறார். யார் கட்சியை ஆரம்பித்தாலும் திமுகவை தான் பற்றி பேசுவார்கள். ஏனென்றால் திமுக தான் மக்கள் மன்றத்தில் இருக்கக்கூடிய இயக்கம். சினிமாவில் நடிப்பவர் கூட்டத்தை நடத்தலாம், எந்த வகையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைக்க முடியாது.
மேலும் எம்ஜிஆர் அண்ணாவோட இருந்தவர், கலைஞரோடு இருந்தவர் மக்களோடு மக்களாக இருந்தவர் தான் சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்கு வழங்கியவர், இவர் யார்? விஜய் யார்? இவர் என்ன செய்திருக்கிறார் என ஒன்றைச் சொல்லுங்கள் 200 கோடி 300 கோடி சம்பாதிக்கக்கூடிய நடிகர் என்றார். தூத்துக்குடிக்கு வரும் விஜய்க்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிப்பீர்களா என்ற கேள்விக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள், என்று தெரிவித்துள்ளார்.