For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காட்டி மூலம் கம்பேக் கொடுத்துள்ளாரா அனுஷ்கா..? - இதோ திரை விமர்சனம்!

அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான காட்டி படத்தின் திரைவிமர்சனம் உங்களுக்காக.
01:01 PM Sep 08, 2025 IST | Web Editor
அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான காட்டி படத்தின் திரைவிமர்சனம் உங்களுக்காக.
காட்டி மூலம் கம்பேக் கொடுத்துள்ளாரா அனுஷ்கா      இதோ திரை விமர்சனம்
Advertisement

கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான திரைப்படம் காட்டி. தென் இந்திய சினிமாவின் வசூல் ராணியாக இருந்த அனுஷ்கா ஷெட்டிக்கு கம்பேக் கொடுத்துள்ளதா இந்த காட்டி..? வாங்க பார்க்கலாம்!

Advertisement

ஒரிசா மலைப்பகுதிகளில் காட்டி என்று அழைக்கப்படும் மலைவாசிகள் உயர் ரக கஞ்சா பயிரிட்டு, அதை பொதிமூட்டையாக சுமந்தபடியே கீழே உள்ள சமவெளி பகுதிக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். அந்த வகை கஞ்சாகளுக்கு வேர்ல்ட் மார்க்கெட்டில் டிமாண்ட். அவர்களை பயன்படுத்தி வில்லன் கும்பல் கஞ்சா வியாபாரம் செய்து, கோடிகளை சம்பாதித்து ராஜ வாழ்க்கை வாழ்கிறது. வேறு வேலை யின்மை, போலீஸ் கெடுபிடி, அடிமை வாழ்க்கை என வாழும் காட்டி சமூகத்தில் பிறந்த அனுஷ்காவும், விக்ரம்பிரபுவும் மற்றவர்களை போல கஞ்சா சுமக்கும் வேலையை செய்கிறார்கள். ஒரு போலீஸ் ரெய்டில் தந்தையை இழக்கும் விக்ரம்பிரபு லேப் டெக்னிஷியனாக மாறுகிறார். ஒரிசா பஸ் கன்டக்டர் ஆகிறார் அனுஷ்கா. இருவரும் திருமணம் செய்ய இருக்கும் நேரத்தில் விக்ரம்பிரபுவை கொடூரமாக கொலை செய்து, அனுஷ்காவை மானபங்கபடுத்துகிறார்கள் அண்ணன், தம்பிகளான ரவிந்திரவிஜய், சைதன்யாராவ். காரணம், கஞ்சா வியாபாரம் செய்யும் அவர்களுக்கு தெரியாமல், காட்டி மக்கள் நலனுக்காக ரகசிய பேக்டரி நடத்தி அதில் கஞ்சா ஆயில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள் விக்ரம்பிரபுவும், அனுஷ்காவும். அப்புறமென்ன, காதலன் கொலைக்காக, எத்தனை கொலை செய்கிறார் அனுஷ்கா. அந்த மக்கள் நலனுக்காக என்ன செய்கிறார் என்பது மீதி கதை

சிங்கம், பாகுபலி படங்களில் பார்த்த அனுஷ்காவாக இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஆக்சனில் கலக்கியிருக்கிறார் அனுஷ்கா. குறிப்பாக, காதலன் கொல்லப்பட்டபின்,அதற்கு காரணமானவர்களை தேடி சென்று ஆக்ரோசமாக கொல்லும் காட்சிகள் வேறு லெவல். அதேசமயம், விக்ரம்பிரபு, அவருக்கான காதல் காட்சிகள், பஸ் கன்டக்டராக அவர் இருக்கும் காட்சிகள் ஸ்மைலிங். ஒரிசா பாணியிலான காஸ்ட்யூம், அணிகலன்கள் அவருக்கு பக்காவாக செட்டாகி இருக்கிறது. இடைவேளைக்குபின் அனுஷ்காவின் பழிவாங்கலே படம். ஆனாலும், ஆக் சன் காட்சிகளில் அவர் உணர்வுபூர்மாக நடித்து இருக்கலாம். சண்டைகாட்சிகளில் இன்னும் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கலாம். ஒரிசா கலாச்சார பின்னணியில் அனுஷ்கா சாங், அவ்வளவு அழகு.

அனுஷ்கா காதலனாக, காட்டி மக்களுக்கு நல்லது செய்பவராக நன்றாக நடித்து இருக்கிறார் விக்ரம்பிரபு. இடைவேளை காட்சியில் அவரின் உருக்கமான நடிப்பு படத்துக்கு பலம். சைதன்யாராவ், ரவீந்திரவிஜய் வில்லன்களாக மிரட்டியிருக்கிறார்கள். நல்ல போலீசா? கெட்ட போலீசா என்று சந்தேகப்படும் அளவுக்கு தனி முத்திரை பதித்து இருக்கிறார் ஜெகபதிபாபு. இவர்களை தவிர, மலைபகுதியில் வண்டியில் வியாபாரம் செய்பவராக வரும் டான்ஸ்மாஸ்டர் ராஜீவ்சுந்தரம், கெட்ட போலீசாக வரும் ஜான் விஜய், கார்ப்பரேட் வில்லன் கும்பலும் மனதில் நிற்கிறார்கள். அரசியல்வாதியாக வரும் விடிவி கணேஷ் வீணடிக்கப்பட்டுள்ளார். மலை வாழ்மக்களாக நடித்தவர்கள் நடிப்பு, உடை, காஸ்ட்யூம், அணிகலன்கள் மனதில் நிற்கிறது

ஒரிசா பின்னணியில் , அதுவும் காட்டிகள் என்ற மலைவாழ் மக்களை பற்றி இப்படியொரு கதை எந்த படத்திலும் வந்தது இல்லை. கஞ்சா விளைவிப்பு, கடத்தல் பின்னணியில் இப்படியொரு நெட் வொர்க் இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு திரைக்கதையை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கிரிஷ். குறிப்பாக, மலைவாழ் காட்சிகள், கஞ்சா கடத்தும் காட்சிகளை, இடைவேளை, கிளைமாக்ஸ் காட்சிகளை தத்ரூபமாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ். நாகவல்லிவித்யாசாகர் பாடல்கள் சுமார் என்றாலும், பின்னணி இசை ஓகே.

வழக்கமான கார்ப்பரேட் வில்லன்கள், வழக்கமான கொடூர வில்லன்கள், வழக்கமான போலீஸ், வழக்கமான பழிவாங்கும் கதை என்பது படத்தின் மைனஸ். கிளைமாக்ஸ், இடைவேளை காட்சி உயிர்ப்பாக இருக்கிறது. முதற்பாதியில் விறுவிறுப்பு மிஸ்சிங். அனுஷ்காவும் ஒரேமாதிரி நடித்து ஏமாற்றுகிறார். அவருக்கான டப்பிங் செட்ஆகவில்லை.

மலைவாழ் மக்களின் கதை என்றாலும், அனுஷ்காவை முன்னிறுத்தியதால் பல இடங்களில் சினிமாதனம் தெரிகிறது. அனுஷ்காவும் அந்த கேரக்டருக்கு 100 சதவீதம் செட் ஆகாதது ஏமாற்றம். கஞ்சாவால் ஏற்படும் தீமைகள், மலை வாழ்மக்களின் வலிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருந்தால் காட்டியை வெகுவாக ரசித்து இருக்கலாம். ஆனாலும், அனுஷ்காவை மாறுபட்ட வேடத்தில் பார்க்க விரும்புகிறவர்கள், மாறுபட்ட ஒரு கதைகளத்தை விரும்புகிறவர்களுக்கு காட்டி பிடிக்கும்.

சிறப்பு செய்தியாளர் - மீனாட்சிசுந்தரம்

Tags :
Advertisement