For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அதிமுக 'சார்'-களை இபிஎஸ் மறந்து விட்டாரா?" - அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

“சார்” போன்றவர்களை காப்பாற்ற முனைவதால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக கூறிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
07:20 PM Jan 27, 2025 IST | Web Editor
“சார்” போன்றவர்களை காப்பாற்ற முனைவதால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக கூறிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 அதிமுக  சார்  களை இபிஎஸ் மறந்து விட்டாரா     அமைச்சர் சிவசங்கர் கேள்வி
Advertisement

சென்னை பெரம்பூரை சேர்ந்த பள்ளி சிறுமி தனது தோழியின் இல்ல விழாவிற்கு செல்வதாக கூறி சென்றுவிட்டு வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகாரையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை தேடும் பணியை துரிதப்படுத்தினர்.

Advertisement

தொடர்ந்து சிறுமியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த காவல்துறையினர் அவரின் இருப்பிடத்தை கண்டறிந்து அங்கு சென்றனர். அப்போது அந்த சிறுமியுடன் மேலும் இரு சிறுமிகளை காதலிப்பதாக கூறி 3 சிறார்கள் உட்பட 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து சிறுமிகளை மீட்ட காவல்துறையினர் குற்றச் செயலில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது, அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை திமுக அரசு உணர வேண்டும் என்றும் "சார்" போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல "சார்"-கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,

“புகார் பெறப்பட்ட உடனே விரைவாக செயலாற்றி பள்ளி மாணவிகளை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி பெண்கள் தொடர்பான புகார்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியை போன்று அலட்சியமாக இல்லாமல் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக செயலாற்றி வருகிறது. மேலும் திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் வகையில் குற்றத்தின் மீதான விசாரணையை வேகப்படுத்தி குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனையை பெற்றுக்கொடுத்து வருகிறது.

விரைவாக நடவடிக்கை எடுத்துவிட்டார்களே என்ற விரக்தியிலும் தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் அலையும் எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல அரசை குறை கூறி அவதூறுபதிவு போட்டுள்ளார். "சார்"களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிசாமிக்கு அதிமுகவின் "சார்"களை நினைவிருக்கிறதா? அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக-வை சேர்ந்த 103-வது வட்டச்செயலாளர் சுதாகர் "சார் யார்" என மறந்து விட்டீரா பழனிசாமி?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் “சார்” யார் என்பதை மறந்துபோனாரா பழனிசாமி? நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதானாரே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் “சார்” யார் என்பது மறந்து போனதா?

நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் “அதிமுக சார்களை” மறக்க மாட்டார்கள். மொத்த பாலியல் குற்றவாளி “சார்” -களின் புகழிடமாக அதிமுக-வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திமுக அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமயிலான ஆட்சி பெண்கள் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறதோ அதே அளவு முக்கியத்துவதோடு பெண்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது. திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது"

இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement