ஹவாலா பணம் கடத்தும் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதா மதுரை ? - 3 கோடியே 80 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!
மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மதுரை மாநகர் பகுதியில் சட்ட விரோதமாக ஹவாலா பணத்தை கைமாற்றும் கும்பலின் நடமாட்டம் உள்ளதாக மதுரை மாநகர காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, காவல் துறையினர் மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுவந்தனர்.
இதனிடையே மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுற்றுவட்டார
பகுதியில் ஹவாலா பணமாற்ற கும்பலின் நடமாட்டம் இருப்பதாக விளக்குத்தூண்
காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட காரை சோதனையிட்டனர். அதில் ஹவாலா கும்பல் காரில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கை மாற்றி வந்தது
தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஹவாலா பணத்துடன் சிக்கிய மதுரையைச் சேர்ந்த பாபு ராவ் , பிரதமேஸ் மகாராஷ்டிராவை சேர்ந்த மிட்டல் அக்சய், விஜய் ஆகிய 5 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் காவல்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில்
விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ரொக்க பணத்தை கைப்பற்றி ஹவாலா பணம் பரிமாற்றம் குறித்து
விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பாபுராவ் உள்ளிட்ட 5 பேரும் ஹவாலா பண பரிமாற்று கும்பலிடம் இருந்து சட்டவிரோதமாக பணத்தைப் பெற்று பரிமாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் இதுபோன்ற ஹவாலா பணம் பரிமாற்றத்தில் ஈடுபட்ட முக்கிய புள்ளி யார் ? என்பது குறித்தான விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹவாலா பணம் கடத்தும் ஹாட்ஸ்பாட்டாக மதுரை மாறியுள்ளதா ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 3 கோடியே 80 லட்சம் ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.