டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் இந்தி மொழி நீக்கப்பட்டதா? - பெங்களூர் விமான நிலையம் தரப்பில் விளக்கம்!
மத்திய அரசுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே நடந்து வரும் மொழிப் போருக்கு மத்தியில், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள டிஜிட்டல் அறிவிப்பு பலகைகளில் இருந்து இந்தி நீக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது.
இது தொடர்பான வீடிய்யோவில், விமான நிலைய டிஜிட்டல் அறிவிப்பு பலகையில், விமான எண்கள், சேருமிடங்கள், கேட் எண்கள் உள்ளிட்டவை கன்னடம் மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே காணப்பட்டது. இது இந்தி திணிப்புக்கு கர்நாடக மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் பலரால் பேசப்பட்டது.
இந்த நிலையில் பரவிய அந்த தகவல்களுக்கு பெங்களூர் விமான நிலையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்து. அதன்படி விமானத் தகவல் காட்சி அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப, பயணிகளுக்கு திறம்பட உதவுவதற்காக டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் ஆங்கிலம் மற்றும் கன்னடம் இடம்பெற்றுள்ளன, கூடுதலாக உள்ள அறிவிப்பு பலகையில் இந்தி மொழியும் இடம்பெற்றுள்ளது.
பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட், அதன் வலைத்தளத்தில் கன்னட மொழியை அண்மையில் இணைத்தது. மாநில மொழியில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அம்சம், பயணிகள் விமான நிலைய சேவைகளை எளிதாக புரிந்துகொள்வதை உறுதி செய்கிறது என விமான நிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.