ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்ததாக அவரின் சகோதரர் கைது!
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியாவை மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹர்திக் பாண்டியா, குர்ணல் பாண்டியா மற்றும் ஒன்றுவிட்ட சகோதரரான வைபவ் பாண்டியா மூவரும் இணைந்து பாலிமர் பிஸினஸ் ஒன்றை தொடங்கியிருக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணல் பாண்டியா இருவரும் தலா 40 சதவீதம் முதலீடு செய்துள்ளனர். இதே போன்று ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா 20 சதவீதம் முதலீடு செய்திருக்கிறார்.
இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை வைபவ் பாண்டியா கவனித்து வந்துள்ளார். நிறுவனத்தில் வரும் லாபத்தை மூதலீட்டிற்கு ஏற்றவாறு மூவரும் பிரித்து வந்துள்ளனர். இந்நிலையில் நிறுவனத்தில் வரும் லாபத்தை வைத்து வைபவ் மற்றொரு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதனால் படிப்படியாக லாபம் குறைந்து வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து மற்ற இருவரிடமும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஹர்திக் பாண்டியா மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வைபவ் பாண்டியாவை நேற்று போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னிடம் ரூ.4.3 கோடி வரையில் மோசடி செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா குற்றம் சாட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.