10,000 இந்திய இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஹஜ் விசா - சவுதி அரசு அறிவிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஆண்களும், பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுவது வழக்கம். ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம் பேர் பங்கேற்க சவுதி அரசு அனுமதித்துள்ளது.
சவூதி அரசு அனுமதிக்கப்பட்டுள்ள 1.75 பேரில் 52,000 பேர் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் மூலம் செல்ல உள்ளனர். ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் செல்லும் பயணிகளுக்காக மெக்கா அருகே உள்ள மினாவில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
மினாவில் 5 மண்டலங்களில் இந்தியப் பயணிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் கட்டணம் தாமதமாவதை காரணம் காட்டி 5 மண்டலங்களில் 2 மண்டல ஒதுக்கீடுகளை சவுதி அரசு ரத்து செய்தது. மீதமுள்ள 3 மண்டலங்களுக்கு கட்டணம் செலுத்தும் வசதியையும் சவுதி அரேபிய அரசு நிறுத்தியது.
இதனால் இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 58,000 ஹஜ் பயணிகளின் புனித கடமை கேள்விக்குறியானது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியர்களின் ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில் மத்திய அரசின் வற்புறுத்தலை அடுத்து 10,000 இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஹஜ் விசா வழங்க சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.