கிருஷ்ணகிரியில் பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!
தமிழ்நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில், முன்பைவிட வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மக்கள் அனைவரும் மழை பெய்தால் நன்றாக இருக்கும் என மழையை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மக்களின் மனதை குளிரவைக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்து வந்தது. மேலும் கடந்த சில நாட்களாகவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயில் சதமடித்து வருகிறது.
குறிப்பாக நேற்று மற்றும் இன்றைக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அதிக வெப்ப அலை
வீசுவதற்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை முழுவதும் வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை பலத்த காற்று வீசியது. இதனைத்தொடர்ந்து காவேரிப்பட்டிணம் மற்றும் சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையும் பெய்தது. கடும் வெப்பத்திற்கு இடையே இந்த மழை பெய்ததால், வெப்பம் தணிந்து மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.