எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2 ஆம் முறை பொறுப்பேற்ற பிறகு, வெளிநாடுகளில் இருந்து வேலை மற்றும் படிப்புக்காக, அமெரிக்கா வருபவர்களுக்கான விசா மற்றும் குடியுரிமை விதிகளை கடுமையாக்கியுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு வேலைக்காக வரும் வெளிநாட்டவருக்கான எச்1பி விசா வழங்கும் நடைமுறையில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார்.
அதன்படி, இதுவரை எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 88 லட்சம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளார். இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா முறைகளில் ஒன்று எச்1பி விசா. அமெரிக்க தொழிலாளர்களால் செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய வெளிநாட்டவர்களை பணியமர்த்துவதற்காக மட்டுமே இது பயன்படுத்த வேண்டும்.
இந்த அறிவிப்பு மூலம் வெளிநாட்டவர்களை பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். இதன்மூலம், உண்மையிலேயே திறமையான, அமெரிக்க தொழிலாளர்களால் செய்ய முடியாததை செய்யக் கூடியவர்களாக அவர்கள் இருப்பதை உறுதி செய்யும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.