இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ் குமார்!
இந்திய தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் (பிப்.18) முடிவடைந்து. இதற்கிடையில் புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் கடந்த 17ஆம் தேதி தேர்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுதலுடன் அன்று நள்ளிரவே அறிவிப்பு வெளியானது. இதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் தேர்தல் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது தொடர்பாக ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று (பிப்.19) நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவி ஏற்றுள்ளார். பதவியேற்புக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில், “நாட்டை கட்டியெழுப்புவதற்கான முதல் படி வாக்களிப்பதுதான். எனவே, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வாக்காளராக வேண்டும். வாக்களிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் சட்டங்கள், விதிகள் மற்றும் அதில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையராகவும், ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை வரைவு செய்ததிலும், அயோத்தி கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்குகளில் ஆவணங்களை கையாண்டதிலும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.