சிதம்பரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது!
கடலூர் மாவட்டம் சிதம்பரம், அண்ணாமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்படி சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் போதைப்பொருள் குற்ற தடுப்பு சம்பந்தமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற குட்கா பாக்கெட்டுகளை வைத்து பிரித்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அண்ணாமலைநகர் அருகே உள்ள வேளக்குடி மேம்பாலத்திற்கு கீழே சென்றபோது அங்கு சிலர் குட்கா பாக்கெட்டுகளை மூட்டை மூட்டையாக பிரித்துக் கொண்டிருந்தனர். பின்னர் போலீசார் சுமார் 15 மூட்டைகளில் வைத்திருந்த 300 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ 12 லட்சம் ஆகும்.
இதையடுத்து அங்கிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாண்டவன்குளம் பகுதியைச் சேர்ந்த பாரிவள்ளல்(26), தரங்கம்பாடி அன்னப்பன்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(26), அளக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்(60), சிதம்பரம் பொன்னம்பலம் நகரைச் சேர்ந்த பழனிவேல்(65) மற்றும் சிதம்பரம் ஞானப்பிரகாசகுளத் தெருவைச் சேர்ந்த குணசேகர் (70) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து பரிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.