#Gunaa ரீ-ரிலீஸ் தடை நீக்கம்... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘குணா’ திரைப்படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான திரைப்படம் குணா. அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த மஞ்சுமெல் பாய்ஸ் மலையாளத் திரைப்படத்தில், குணா திரைப்படத்தின் பாடல் ஓர் அங்கமாகவே அமைந்தது. இந்த சூழலில் குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த சூழலில் ‘குணா’ படத்தின் பதிப்புரிமை தங்களுக்கே சொந்தம் எனக்கூறி அந்தப் படத்தை மறுவெளியீடு செய்ய தடை விதிக்கக் கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘குணா’படத்தை மறு வெளியீடு செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக பிரமீடு மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரமீடு மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பதிப்புரிமைக்கான காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தை திரையரங்கில் வெளியிடும் உரிமையை கோர முடியாது.
எனவே இடைக்காலத் தடையை நீக்கி குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்ய அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி, ‘குணா’ திரைப்படத்தை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.