கல்வித்தரத்தில் குஜராத் பின்னடைவு.. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா? - #NITIAayog அறிக்கை வெளியீடு!
கல்வித்தரத்தில் குஜராத் மாநிலம் பின் தங்கியுள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி அறிக்கையில், கல்வித்தரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான மதிப்பீட்டில் கேரளா 82 உடன் முதல் இடத்திலும், ஹரியானா மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் 77 பெற்று அடுத்தடுத்த இடத்திலும், தமிழ்நாடு 76 பெற்று 4வது இடத்திலும் உள்ளன. இந்த மதிப்பீட்டில் குஜராத் 58 மட்டுமே பெற்று ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களுக்கும் கீழிடங்களில் உள்ளது.
குஜராத் மாநில அரசு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ஷாலா பிரவேஷோத்சவ்’ என்ற பெயரில் பள்ளிச் சேர்க்கைத் திட்டத்தை நடத்தி வருகிறது. அங்குள்ள மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்று எந்த குழந்தையும் விடுபடாமல் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், 1 - 8 வகுப்பில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 89% ஆக உள்ளது. ஆனால், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் 100% சேர்க்கைகளையும், ஆந்திரப் பிரதேசம் 96.9% சேர்க்கைகளையும் பெற்றுள்ளது.
மறுபுறம், மாணவர் சேர்க்கை 100% இல்லாமல், மேல்நிலைப் படிப்பை இடைநிறுத்தும் மாணவர்கள் விகிதம் அதிகரித்துள்ளது. 1980 - 1990களின் இடைநிற்றல் விகிதத்துடன் ஒப்பிடும்போது, தற்போது இடைநிற்றல் குறைந்துள்ளதாகக் கூறப்படும் குஜராத்தில் 17.9% கல்வி இடைநிற்றல் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. கேரளா, ஹரியானா போன்ற மாநிலங்களில் கூட இடைநிற்றல் விகிதம் 5.5% மற்றும் 5.9% அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், உயர்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 81% மற்றும் 85% உள்ள நிலையில், குஜராத்தில் வெறும் 48.2% மட்டுமே சேர்க்கை உள்ளது.
குஜராத்தில் 99.93% பள்ளிகளில் அடிப்படை வசதிகளான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி உள்ளது. 98% பள்ளிகளில் கணிணி வசதியும், 97% பள்ளிகளில் பயிற்சி பெற்ற மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத் அரசு நடத்தும் 1,606 தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு இயங்குவதாக கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தது. கடந்த 2022 இல் 700 பள்ளிகளில் இதுபோன்று இருந்ததாகவும், கிட்டத்தட்ட ஒரு ஆண்டில் இதனை இரட்டிப்பக்கியதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.