#Gujaratfloods | குஜராத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் முதலைகள்!
குஜராத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் முதலைகள் உலாவர தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மழையினால் மாநிலத்தில் உள்ள ஆறுகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நவ்சாரி, வதோதரா மற்றும் கெடா உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 40 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
வதோதரா மாவட்டத்தில் உள்ள விஸ்வாமித்ரி ஆற்றின் வெள்ளப் பெருக்கை தொடர்ந்து, முதலைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலாவர தொடங்கியுள்ளன. வதோதராவின், அகோடா ஸ்டேடியம் பகுதியில் 15 அடி நீள ராட்சத முதலை ஒன்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு வீட்டிற்குள் புகுந்தது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் முதலையை மீட்டனர்.
மேலும், வதோதராவின் பரோடா மகாராஜா சயாயாஜிராவ் பல்கலைக்கழக வளாகத்தில் 11 அடி முதலை ஒன்றும் மீட்கப்பட்டது. அதேபோல், வதோதரா பகுதியில் உள்ள நற்ஹாரி மருத்துவமனை வளாகத்திலும் ராட்சத முதலை புகுந்தது. முதலையை பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கடந்த 5 நாள்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட முதலைகளை மீட்டுப் பாதுகாப்பான இடங்களில் விட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.