'2024' டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 7.3 சதவீதம் அதிகரிப்பு - மத்திய நிதி அமைச்சகம் தகவல் !
கடந்த டிசம்பர் மாதம் ரூ.1.77 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் (டிசம்பர்) ரூ.1.77 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த டிசம்பர் மாதம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.77 லட்சம் கோடி ஆகும். கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் ரூ.1.65 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், தற்போது 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் வசூலான ஜிஎஸ்டி வருவாயில் மத்திய ஜிஎஸ்டி ரூ.32 ஆயிரத்து 836 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.40 ஆயிரத்து 499 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.47ஆயிரத்து 783 கோடி, செஸ் வரி ரூ.11ஆயிரத்து 471 கோடியாகும்.
உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கப் பெற்ற ஜிஎஸ்டி 8.4 சதவீதம் உயர்ந்து, ரூ.1.32 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதேபோல், இறக்குமதி மூலம் கிடைக்கப் பெற்ற ஜிஎஸ்டி 4 சதவீதம் அதிகரித்து, ரூ.44 ஆயிரத்து 268 கோடி வசூலானது. இந்த மாதத்தில் வரி செலுத்துவோருக்கு திருப்பியளிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை ரூ.22 ஆயிரத்து 490 கோடி. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.