வலுக்கும் பாலியல் குற்றச்சாட்டு - மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் சித்திக்!
தன் மீதான பாலியல் வன்கொடுமை புகார்கள் வலு பெற்றதை அடுத்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) பொதுச்செயலாளர் பதவியை நடிகர் சித்திக் ராஜினாமா செய்தார்.
சமீபத்தில் கேரள திரையுலகை பற்றிய செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஹேமா கமிட்டி அறிக்கையில், கேரள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் தான் கேரளா திரையுலகம் இயங்குகிறது என்றும், பல்வேறு புகார்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டன. மிகவும் அமைதியாக இயங்கும் மலையாள திரையுலகில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்றும் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் நடிகர், இயக்குனர் மற்றும் கேரள மாநில சலசித்ரா அகாடமி தலைவருமான ரஞ்சித் பாலியல் முறைகேடு புகார்களில் சிக்கியதை அடுத்து, அம்மாநில பொதுச் செயலாளர் சித்திக் மீதும் பரபரப்பு குற்றசாட்டு எழுந்தன. கேரளாவின் நட்சத்திர அமைப்பான AMMA-வின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகையும், மாடலுமான ரேவதி பாலியல் புகாரை வைத்துள்ளார். 2019-ம் ஆண்டு நடிகையை தாக்கிய வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டது தொடர்பாக சித்திக் மற்றும் கேபிஏசி லலிதா பேசிய செய்தியாளர் சந்திப்பின் காணொளியை மீண்டும் பகிர்ந்து நடிகை ரேவதி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.