#TNPSCGroup4 | குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு - TNPSC அறிவிப்பு!
குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு, ஜுன் 9ம் தேதி நடைபெற்று முடிந்தது.
குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இதற்கிடையே, குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில், குரூப் 4 தேர்வுக்கான காலிபணியிடங்களை இன்னும் அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து அதற்கான கணக்கெடுப்புகள் நடைபெற்றன. கணக்கெட்டுப்பிறகு பின் அக்டோபர் முதல் அல்லது 2வது வாரத்தில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு பிரிவில் 2,208 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்தமாக டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான காலிபணியிடங்கள் 8,932 என அதிகரித்துள்ளது.