“ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது!” - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தயாரித்துக்கொடுத்த உரையை படிக்க மறுத்து வெளிநடப்பு செய்த ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது X தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையை படிக்க மறுத்திருக்கிறார். ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படாததை கண்டித்தும், ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள பல பகுதிகளில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதாலும் உரையை படிக்கவில்லை என்று ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஆளுநர் உரையின் போது அவையில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தனவோ, அதே தான் இப்போதும் தொடர்ந்திருக்கின்றன. தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரைக்கு அவரது அலுவலகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேபோல், ஆளுநர் உரைக்கு முன் தேசிய கீதம் இசைப்பது தமிழக மரபல்ல என்று ஆளுநர் அலுவலகத்திற்கு தமிழக சட்டப்பேரவைச் செயலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவையில் உரையை வாசிக்காததும் வெளிநடப்பு செய்ததும் நியாயப்படுத்த முடியாதவை.
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.