“ஆளுநர் வாயில் வந்ததை பேசுகிறார்“- அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு
ஆளுநர் வாயில் வந்ததை பேசுவதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி
செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு, துறை அதிகாரிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, பணிகள் எவ்வளவு விரைவாக
முடிக்கப்படும் என ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார்.
இதனை அடுத்து பேருந்து நிலையத்தின் திறப்பு விழாவிற்காக மேடை அமைப்பதற்கான ஏதுவான இடத்தை ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிம் கூறியதாவது..
''3 அணுகு சாலைகளை அமைக்கும் பணி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வளைவு அமைக்கின்ற பணி, பேருந்து நிலையத்தில் காவல் நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். 2013 இல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், 2019ல் துவங்கி நடைபெற்று வந்தது. திட்டமிடாமல் துவங்கப்பட்ட பணி என்பதாலே காலதாமதம் ஏற்பட்டது.
போர்க்கால அடிப்படையில் வடிகால் அமைக்கும் பணி இரண்டு இரவுகளில்
நடைபெற்று முடிந்தது. ஆம்னி பேருந்துகள் அமைக்கும் பணி விரைவாக முடிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய நுழைவு வாயில் 40 நாட்களில் பணி நிறைந்து
திறக்கப்பட உள்ளது. நவம்பர் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து 20 ஆம் தேதிக்குள்
அனைத்து பணிகளும் முடிவடைய ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்'' என்றார்.
ஆளுநர் விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ''வந்ததை தின்றுவிட்டு, வாயில் வந்ததை பேசும் ஆளுநர் . திராவிட முன்னேற்ற கழகம்
எப்பொழுதும் சட்டப் போராட்டத்தில் இறுதியில் வெற்றி பெறும்'' என்றார்.