தொடங்கிய 3 நிமிடங்களிலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் #RNRavi!
ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தொடர் தொடங்கிய 3 நிமிடங்களிலேயே உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நிகழாண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணியளவில் பேரவை மண்டபத்தில் கூடியது. இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற இருந்தார். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தொடர் தொடங்கிய 3 நிமிடங்களிலேயே உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டார்.
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவிருந்த நிலையில், தேசிய கீதத்தை பாட அனுமதிக்க வில்லை எனக் கூறி ஆளுநர் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேறினர்.
கடந்த ஆண்டும் தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்கவில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே தனது உரையை நிறைவு செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த ஆண்டும் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது சர்ச்சையாகியுள்ளது.