மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றதற்கும் ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும் ஆளுநர், பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசினார். நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து விவாதித்ததாக தகவல் வெளியானது. நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையல், ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மக்களின் அமைதி, முன்னேற்றம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆக்கபூர்வ ஆலோசனை மேற்கொண்டேன். அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகள் மீது ஆழ்ந்த பார்வையும், அவர்கள் மீது மிகுந்த அக்கறையும் உள்ளது" என்று பதிவிட்டுளளார்.