மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி - ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு!
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை குற்றவாளி என அறிவித்து அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் பொன்முடி தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அங்கு பொன்முடியின் தண்டனையையும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவரது எம்எல்ஏ பதவி திரும்பக் கிடைத்துவிட்டது. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தால் திரும்ப பெறப்பட்டது.
இதையடுத்து பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலுடன் முதல்வர் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் ஆளுநரோ பொன்முடியின் தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் குற்றவாளிதான். எனவே அவருக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என விளக்கம் அளித்தார். இதையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு "பொன்முடியின் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துவிட்டது. அதன் பிறகு பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ரவி மறுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஒரு ஆளுநரே அரசியலமைப்பு சட்டத்தை மீறினால் மாநில அரசு என்ன செய்யும்?
ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டம் தெரியுமா? தெரியாதா? ஒருவரின் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் அவருக்கு தண்டனையே விதிக்கப்படவில்லை என்பதுதானே அர்த்தம். அப்படியிருக்கும் போது பொன்முடியை எப்படி கறைபடிந்தவர் என கூறமுடியும்? எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பை, ஆளுநர் ஆர்.என்.ரவி மீறிவிட்டார்" என அந்த அமர்வு காட்டமாக தெரிவித்தது.
மேலும் பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி முடிவெடுக்க இன்று வரை கெடு வழங்குவதாகவும், அதற்குள் ஆளுநர் தனது முடிவை தெரிவிக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்போம் என இப்போது தெரிவிக்கப் போவது இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அமைச்சராக பதவியேற்க வருமாறு பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
கிண்டி ராஜ்பவனில் உள்ள அரங்கில் மாலை 3.30 மணி அளவில் எளிமையான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் இதில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனித்து வரும் உயர்கல்வித்துறை மீண்டும் பொன்முடிக்கு தரப்பட உள்ளது.