ரயில்வே அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!
ரயில்வே துறை தமிழ்நாடு மீது சிறப்புக் கவனம் செலுத்தி வருவது மிகுந்த திருப்தி அளிக்கிறது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“இந்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். அவரது தலைமையில் ரயில்வே துறை நமது மாநிலம் மீது சிறப்புக் கவனம் செலுத்தி வருவது மிகுந்த திருப்தி அளிக்கிறது.
2014 முதல் நமது மாநிலத்தில் 1303 கி.மீ புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,242 கி.மீ பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளன, 715 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், பயணிகளுக்கென அதிநவீன வசதிகளுடன் கூடிய 8 வந்தே பாரத் நவீன ரயில்கள் இப்போது தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இயக்கப்படுகின்றன.
இந்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். அவரது தலைமையில் ரயில்வே துறை நமது மாநிலம் மீது சிறப்புக்… pic.twitter.com/qSbmIe6PPh
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) February 24, 2025
ரூ.33,467 கோடி செலவில் புதிய தண்டவாளங்கள் அமைக்கும் 22 திட்டங்கள் மட்டுமின்றி மேலதிகமாக ரூ.2,948 கோடி செலவில் 77 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கப்பட்ட அம்ரித் பாரத் நிலையங்களாக மாற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இவை அனைத்தும் தமிழ்நாட்டை ரயில்வே சேவைகளின் மிகப்பெரிய பயனாளியாக ஆக்குகின்றன. தமிழ்நாடு மக்கள் மீது கொண்ட அளவற்ற அன்பு செலுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.