ஆளுநர் தனது கடமைகளை செய்வதில்லை - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!
ஆளுநர் என்பவர் ஆளுநராகச் செயல்பட வேண்டும். அவர் தற்போது ஆளுநரின் கடமைகளைச் செய்யவில்லை என கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும், அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே, வார்த்தைப் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆளுநர் மீதான தனது அதிருப்தியை, இன்று (டிச.7) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முதலமைச்சர் பினராயி விஜயன் வெளிப்படுத்தினார். ஆளுநர் மீது குற்றம்சாட்டியுள்ள அவர் கூறியதாவது, “ஆளுநர் என்பவர் ஆளுநராகச் செயல்பட வேண்டும். அவர் தற்போது ஆளுநரின் கடமைகளைச் செய்யவில்லை“ என்று கூறினார்.
கேரளாவில் மாநில அரசுக்கும், ஆளுநர் தரப்புக்குமிடையே தொடர்ந்து நீடித்து வரும் மோதல் போக்கு, கண்ணூர் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்திற்குப் பின், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கேரள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்பட்ட விவகாரம் குறித்த தனது அதிருப்தியை நேற்று(டிச.6) வெளிப்படுத்தியிருந்தார் கேரள ஆளுநர். அப்போது பேசிய அவர், “மசோதா அல்லது அவசரச் சட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றால், அதுகுறித்து ஆளுநா் மாளிகைக்கு வந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று மாநில அரசை அறிவுறுத்தியிருந்தார்.
இதனிடையே, 2 மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது குறித்து பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், “ஆளுநர் தன்னிடம் ஏதாவது கூற விருப்பப்பட்டால், அதை நேரடியாக தன்னிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், அதை விடுத்து, ஊடகங்கள் மூலம் தெரிவிக்கக்கூடாது” என்றும் கூறினார்.